Public Works Department action 90-degree bridge caused controversy bhopal

மத்தியப் பிரதேசத்தில் 90 டிகிரி திருப்பத்துடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் வடிவமைப்பு நாடு முழுவதும் சர்ச்சையான நிலையில், தற்போது மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில தலைநகரான போபாலில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ரூ.18 கோடி செலவில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. 648 மீட்டர் நீளம் மற்றும் 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம், கூர்மையான 90 டிகிரி வளைவில் கட்டப்பட்டிருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

அதாவது லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள் மேம்பாலத்தில் பயணிக்கும் போது, 40 டிகிரி வளைவாக இருந்தால் தான் சுலபமாக திரும்ப முடியும். ஆனால், இந்த மேம்பாலம் ரூ.18 கோடி செலவில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு பலரும் விமர்சனம் செய்து வந்தனர். மேலும், இந்த பாலத்தில் பயணிக்கும் போது விபத்துகள் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இது குறித்து மேம்பாலத்தை கட்டிய பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.டி.சர்மா தெரிவிக்கையில், “மெட்ரோ நிலையம் இருந்ததால் அந்த இடத்தில் நிலம் குறைவாக உள்ளது. நிலம் இல்லாததால் வேறு வழியில்லாமல் இருமுனைகளையும் இணைத்துள்ளோம்” என விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், சர்ச்சையை ஏற்படுத்திய அந்த மேம்பாலம், தற்போது மறுவடிவமைப்பு செய்யப்படுவதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் நிலத்தை வழங்க இந்திய ரயில்வே துறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நிலம் ஒப்படைத்தவுடன் பாலத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலத்தின் அகலம் சுமார் மூன்று அடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.