நான்கு பக்கமும் கடல் நீர் சூழ, நடுவில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்திருக்கும் தேசம்தான் இலங்கை. ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகளால் பூத்துக் குலுங்கிய இலங்கை தேசம், இன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தக தகத்து வாடுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது. குழந்தைக்கான பால் முதல் பொருளாதாரத்திற்கான பெட்ரோல் வரை அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை மக்களின் அடுத்த வேளை உணவும், வாழ்வும் கேள்விக்குறியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் ஆயுளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
உள்நாட்டுப் போர், பொருளாதார நெருக்கடி என மனிதர்கள் மரணித்துக் கொண்டிருக்கும் வேளையில் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை பறைசாற்றும் விதமாக ஒரு குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.
இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம், குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். வனத்தில் இருந்து வரும் ஒரு குரங்குக்கு உணவளித்து அதன் பசியை போக்கி வந்திருக்கிறார். குரங்கும் அவரின் சகோதரரை போல் பீதாம்பரத்துடன் பழகி வந்திருக்கிறது.
இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்க, கடந்த திங்கட்கிழமை குரங்கு வழக்கம் போல், உணவிற்காக தனக்கு உணவளிக்கும் பீதாம்பரம் வீட்டுக்கு வந்திருக்கிறது. தான் வந்தவுடன் இன்முகத்தோடு உணவளிக்கும் பீதாம்பரம் கூட்டத்திற்கு நடுவில் சவப்பெட்டியில் அசைவின்றி படுத்திருப்பதை பார்த்து, அவர் அருகே சென்று சில நிமிடம் அவரை உற்றுப்பார்த்தது. அவர் அசைவின்றி இருப்பதை கண்டு அவர் மீது கையை வைத்து சீண்டியது. அப்பொழுதும் அசைவின்றி இருந்த பீதாம்பரத்திற்கு முத்தம் கொடுக்கிறது, ஆனாலும் அவர் எழும்பவில்லை. இறுதியில் பீதாம்பரம் இறந்துவிட்டதை உணர்ந்த குரங்கு கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியது. இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிலர் குரங்கை விரட்டினாலும் பீதாம்பரத்தின் உடலை விட்டு விலகாமல் அமைதியாக அவரின் உடல் அருகே நின்றது. இறுதியில் அவரின் உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அவரது இறுதி சடங்கு வரை கூடவே இருந்துள்ளது.
நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் வஞ்சம், பொறாமை, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது, நீ பெரியவனா இல்ல நான் பெரியவனா என்ற போட்டியில் மனிதம் தான் பெரியது என நிரூபித்திருக்கும் குரங்கின் செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.