Iranian leader vows they will never surrender

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே சில மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏவுகணை தாக்குதல் அரங்கேறி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அணு குண்டுகளை தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்கும் வகையில் ஈரானோடு அணு ஆயுதக் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இறங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாததால், கடந்த 12ஆம் தேதி நள்ளிரவு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையம், அணுசக்தி நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னால், அமெரிக்காவின் தூண்டுதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும், இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள் மூலமாகவும், ட்ரோன்கள் மூலமாகவும் ஈரான் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் உள்ள பல அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் ஈரான் நடத்திய தாக்குதலில் சேதமடைந்துள்ளது.

Advertisment

இரு நாடுகளுக்கு இடையிலான நடக்கும் தொடர் தாக்குதலில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளதால், உலக மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனிடையே, ஈரான் வான் பரப்பு முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

Iranian leader vows they will never surrender

இந்த நிலையில், ஈரான் சரணடையாது என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய கமேனி, “போர் தொடங்குகிறது, சியோனிஸ்ட்டுகளுக்கு இரக்கம் காட்ட முடியாது. பயங்கரவாத பிராந்தியத்துக்கு எதிராக பலத்துடன் இயங்க வேண்டும், சமரசத்துக்கு வாய்ப்பில்லை. திணிக்கப்பட்ட போருக்கு எதிராகவும், திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கிறோம். ஈரான் யாருக்கும் சரணடையாது. ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் பெரும் தவறு இழைத்துவிட்டது. அந்த தவறுக்கான தக்க தண்டனை கொடுக்கப்படும். ஈரானின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள், ஒருபோது ஈரானியர்களை அச்சுறுத்துலால் எதிர்கொள்ள மாட்டார்கள். அமெரிக்க ராணுவம் தலையிடும் எந்தவொரு விஷயத்திலும், சரிசெய்ய முடியாத விளைவுகள் இருக்கும் என்பதை அமெரிக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். திணிக்கப்பட்ட போர் அல்லது அமைதிக்கு ஈரான் ஒருபோதும் சரணடையாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.