Cyprus MP falls at Prime Minister Modi's feet

3 நாடுகளுக்கு அரசு பயணம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதற்கட்டமாக அவர், மத்திய தரைகடல் தீவு நாடான சைப்ரஸுக்கு சென்றார். அங்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர், சைப்ரஸ் அதிபர் மாளிகையில் நேற்று (16-06-25) அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சுடன், இரு நாட்டு உறவு தொடர்பாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனை தொடர்ந்து, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகோரியோஸ் 3’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சைப்ரஸ் நாடு கெளரவித்தது. இந்த விருது நாட்டிற்கு சிறப்பான சேவை செய்ததற்காக நாட்டின் தலைவர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அந்தஸ்துள்ள மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்த விருது என்னை மட்டும் கெளரவிக்கவில்லை, 140 கோடி இந்திய மக்களையும் கெளரவிக்கிறது. இந்தியா மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கு இடையிலான நட்பு உறவுக்கும், பரஸ்பர புரிதலுக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன்” என்று பெருமையோடு கூறினார்.

Advertisment

இதையடுத்து, சைப்ரஸ் நாட்டில் நிகோசியா வரலாற்று மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை வரவேற்பதற்காக சைப்ரஸ் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பிரதமர் மோடியை கை கொடுத்து வரவேற்ற நிகோசியா நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேலே கைத்ரியோட்டி ம்லாபா என்பவர், மரியாதை செலுத்தும் விதமாக திடீரென்று அவரது காலில் விழுந்து வணங்கினார். உடனடியாக பிரதமர் மோடியும், உறுப்பினர் மைக்கேலேவின் தலையில் கையில் கைவைத்து ஆசிர்வதித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டை உள்ளடக்கிய பிரதமர் மோடியின் மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சைப்ரஸுக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைப்ரஸ் நாட்டைத் தொடர்ந்து கனடாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.