பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் உள்ள சூபி மசூதி அருகே நேற்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ரமலான் நோண்பு துவங்கியுள்ள இந்த காலகட்டத்தில் வழிபாட்டு தலத்தின் அருகே நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறை வாகனத்தை குறிவைத்து இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்தன. அதன்பின் மேற்கொண்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் தற்போது வெடிகுண்டு நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
வெடிகுண்டுகளை உடலில் கட்டியிருந்த 15 வயது சிறுவன் மசூதிக்கு அருகே உள்ள பழக்கடையில் இருந்து வெளியே வந்து, சாலையைக் கடந்து பின்னர் போலீசாரின் வாகனத்துக்கு அருகே வந்து பின்னர் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளார். 15 வயதான அந்த சிறுவன் தலிபான் இயக்கத்தில் இணைந்திருந்தான் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சக மனிதர்களை கொல்லுமளவுக்கு ஒரு 15 வயது சிறுவனின் மனநிலை எப்படி மாறியிருக்கும், எதனால் அவன் இப்படி மாற்றப்பட்டிருக்கலாம் என அடுக்கடுக்கான கேள்விகள் இந்த விவகாரத்தில் சமூக ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.