ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்கும் டெஸ்லாவின் மின்சார கார் உற்பத்திக் குழுவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமி முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அதில், டெஸ்லாவின் மின்சார வாகன 'ஆட்டோ பைலட்' குழுவுக்கு முதல் ஊழியராக அசோக் எல்லுசுவாமி பணியமர்த்தப்பட்டிருப்பதாக் கூறியுள்ளார். தானாகவே இயங்கும் பொறியியல் நுட்பத்திற்கான பணிக்கு அசோக் எல்லுசுவாமி தலைமை தாங்கி குழுவை வழிநடத்திச் செல்வார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அசோக் எல்லுசுவாமி ஃவோக்ஸ்வேகன் (Volkswagen) மின்னணு ஆய்வுக்கூடம் மற்றும் வாப்கோ (WABCO) வாகனக் கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இளங்கலைப் பட்டம் முடித்த எல்லுசுவாமி, கார்கெனி மெலான் பல்கலைக்கழகத்தில் (Carnegie Mellon University) ரோபோடிக்ஸ் சிஸ்டம்ஸ் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.