உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில், எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடான வடகொரியா, உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்து அந்நாட்டுக்கு தங்களுடைய ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. வட கொரிய நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன், அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்தும், அவ்வப்போது ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.
ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். மேலும், தன்னுடைய எதிரி நாடான தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதால், அமெரிக்காவுடனான மோதல் போக்கிலும் கிம் ஜாங் உன் ஈடுபட்டு வருகிறார். இதனால், வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதன் காரணமாக பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் வடகொரியாவுக்கு, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. இதற்கு கைமாறாக, உக்ரைனுக்கு எதிராக நடத்தப்படும் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதற்காக 3,000 ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக தென் கொரியா உளவுத்துறை தகவல் தெரிவித்தது. மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் மொத்தம் 10,000 ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தென் கொரியா தெரிவித்த இந்த தகவலை, ரஷ்யாவும் வட கொரியாவும் முற்றிலும் மறுத்துள்ளன.
இந்த நிலையில், போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துதா நேற்று (24-10-24) தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோலை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய தென் கொரிய அதிபர் யூன் சுக் கூறுகையில், “வட கொரியாவின் படைகளை ரஷ்யாவிற்கு அனுப்புவது ஐ.நா சாசனம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறும் செயலாகும். மேலும், கொரிய தீபகற்பம் மற்றும் ஐரோப்பாவிற்கு அப்பால் உலகளாவிய பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு ஆத்திரமூட்டும் செயல். ரஷ்யா-வடகொரியா ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வட கொரியா, உக்ரைன் போருக்கு சிறப்புப் படைகளை அனுப்பினால், நாங்கள் உக்ரைனை ஆதரிப்போம்.
மேலும், கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து செயல்படுத்துவோம். நாங்கள் நேரடியாக ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற எங்கள் கொள்கையை நாங்கள் கடைப்பிடித்தாலும், வட கொரிய இராணுவ நடவடிக்கைகளின் அளவைப் பொறுத்து, எங்கள் நிலைப்பாட்டை இன்னும் மதிப்பாய்வு செய்யலாம்” என்று கூறினார்.