
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அதனைத் தொடர்ந்து, பரந்தூரில் புதியதாக அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்களை அண்மையில் சந்தித்திருந்தார். அதோடு அக்கட்சி கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி (02.02.2025) 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் விஜய் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து, த.வெ.க.வின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்தார். மேலும் பிரபல அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உடன் விஜய் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக த.வெ.க.வின் 2ஆம் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த 26ஆம் தேதி (26.02.2025) நடைபெற்றது. இதற்கிடையே கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்தார். அதாவது அக்கட்சியின் சார்பில் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
அதில் 98 மாவட்டங்களுக்கு இதுவரை மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள 22 மாவட்டத்திற்கான செயலாளர்கள் இன்று (13.03.2025) நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் 16 பேர் இன்று நியமிக்கப்பட்டனர். மற்ற 6 பேரின் நியமனம் நிர்வாகக் காரணங்களுக்காகத் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அவர் அங்குள்ளவர்களிடம் விஜய்யைச் சந்திக்க வேண்டும் எனவே தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பெண் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. அதோடு சிறப்புக் குழந்தைகள் முன்னேற்றத்துக்கு விஜய் உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முன்னதாக திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டத்திற்கு ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே. மணிகண்டன் என்பவரை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்களில் ஒருவரையே மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இத்தகைய சூழலில் தான் அக்கட்சியின் தலைவர் விஜய் நீலாங்கரையில் இருந்து பனையூர் சென்று கொண்டிருந்தார். அப்போது காரிலும், இரு சக்கர வாகனத்திலும் வந்த த.வெ.க.வினர் விஜய்யின் காரை வழிமறித்து இது தொடர்பாக மனு கொடுக்க முயற்சி செய்தனர். இதனையடுத்து விஜய்யின் கார் ஓட்டுநர் மனுவை அக்கட்சியினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.