
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று(13.03.2025) மாலை சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் லாரி ஒன்று சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதனால் லாரியானது முன்னால் இருந்த காரின் மீது பலமாக மோதியது. இதன் காரணமாகச் சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதே சமயம் இந்த விபத்தில் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 5க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் வயதான மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.