
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (14.03.2025) தமிழக சட்டப்பேரவையில் தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்யவுள்ளார். இதனையடுத்து வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (15.03.2025) தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் 2025 - 2026 ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பான காட்சிகளை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, 2025 - 2026 ஆண்டுக்கான தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (13.03.2025) வெளியிட்டார். அதே சமயம் பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை அக்கட்சியின் எம்.ஏல்.ஏ.க்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமான சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அறையில் காலை 08.45 மணிக்கு நடைபெற உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவிற்குச் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக 66 எம்.எல்.ஏ.க்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.