புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 4,300 ரூபாய்க்கு விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு விளாம்பட்டி, உசிலம்பட்டி, ஆத்தூர், காமலாபுரம், சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனை சில்லறை வியாபாரிகள் முதல் உள்ளூர் வியாபாரிகள் வரை வாங்கிச் செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி இங்கிருந்து சென்னை, கோவை, சேலம், பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகக் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து வெகுவாகக் குறைந்தது. 10 கிலோ வரவேண்டிய இடத்தில் ஒரு கிலோ பூ மட்டுமே பூக்கிறது. நாளை புத்தாண்டு பண்டிகை என்பதால் மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தற்பொழுது வரத்து குறைவு காரணமாக ஒரு கிலோ மல்லிகைப்பூ அதிகபட்சமாக 4,300 ரூபாய்க்கு விற்பனையானது. விலை அதிகரிப்பு விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் போதிய வரத்து இல்லாததால் கவலை அடைந்துள்ளனர். இதனால் மல்லிகைப்பூவை வாங்கி சூடும் பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. கலர் பிச்சி ரூ.900. வெள்ளை பிச்சி ரூ.1,000, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.160, செவ்வந்திப்பூ ரூ. 250, முல்லைப்பூ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.1,500 இப்படிச் சில பூக்கள் விற்பனை ஆகிறது. புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் பூக்களின் விலை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.