Skip to main content

ராஜேந்திரபாலாஜி - மாபா பாண்டியராஜன் மோதல் எதிரொலி; விருதுநகரில் போஸ்டர் யுத்தம்!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

விருதுநகரில் அதிமுக பொதுக்கூட்ட மேடையிலும், சிவகாசியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திரபாலாஜிக்கும் மாபா பாண்டியராஜனுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாகவே வெடித்தது. சால்வை போடவந்த அதிமுக நிர்வாகி ஒருவருக்கு மேடையிலேயே ராஜேந்திரபாலாஜி பளார்விட்டதும் நடந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடனான காணொலிக்காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி  “உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்சனைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டக்கூடாது. கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாகத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்.” என்று பெயர்களைக் குறிப்பிடாமல் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

ராஜேந்திரபாலாஜியும் “மாபா பாண்டியராஜனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பொதுவான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசினேன்.” என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில், காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை சார்பில் விருதுநகரில் மாபா பாண்டியராஜனுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் எங்கள் சமூக, படித்த பண்பாளர் என்று மாபா பாண்டியராஜனைப் புகழ்ந்தும், நாவை அடக்கிப் பேசு என்று ராஜேந்திரபாலாஜியைக் கண்டித்தும் ‘நாடார் வாக்குகள் உனக்கும் உன் கட்சிக்கும் வேண்டாமா?’ என்று அதிமுகவுக்கு மிரட்டல் விடுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்குப் பதிலடியாக விருதுநகர் மாவட்ட புலிதேவன் எழுச்சிப்படை பெயரில், மாபா பாண்டியராஜனைக் கண்டித்து, போராட்டத்தைத் தூண்டாதே, விருதுநகருக்கு டூரிஸ்ட் போல் வந்து சென்று நேரம் பார்த்து கட்சி தாவும் பாண்டியராஜனே! ஜாதி அரசியலைத் தூண்டாதே!.

அதிமுக எம்.ஜி.ஆர். எனும் சிவன் சொத்து. இங்கே ஜாதி அரசியலுக்கு வேலை இல்லை. திருத்திக்கொள்.. இல்லை என்றால் வன்மையாகத் திருத்தப்படுவாய் என்று ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள்  “சுயநலத்துக்காகக் கட்சி விட்டு கட்சி தாவும் மாபா பாண்டியராஜன் படித்த பண்பாளரா? என்னமோ, ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் மாபா பாண்டியராஜனின் பின்னால் நிற்பதைப் போன்று போஸ்டர் ஒட்டி சீன் போட்டால் விடுவோமா?” என்கிறார்கள் ஆதங்கத்துடன். மழைவிட்டும் தூவானம் விடாததுபோல், ராஜேந்திரபாலாஜிக்கும் மாபா பாண்டியராஜனுக்கும் இடையிலான அக்கப்போர் ஓயாது போல. 

சார்ந்த செய்திகள்