![kkk](http://image.nakkheeran.in/cdn/farfuture/jcvnpShJUmta2ULLd6jilQZ6070_mDYTCn9nlUQYoT4/1535927948/sites/default/files/inline-images/IMG-20180901-WA0054.jpg)
வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு அருகேயுள்ள ராதாகிருஷ்ணன் நகரில் வசிப்பவர் ரமேஷ். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் மேலாராக பணியாற்றி வருகிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது மகன் டிஷோ ரமேஷ். திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊரான காட்பாடிக்கு வந்திருந்தபோது கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இரவு காரில் வந்த சிலர் மாணவரை வீட்டு வாசலில் இருந்து கடத்தி சென்றனர்.
முதலில் மாணவன் செல்போனிலிருந்து அவரின் பெற்றோருக்கு தொடர்புகொண்டு உங்களின் மகன் உயிரோடு வேண்டுமானால் ஒரு கோடி கொடுக்க வேண்டுமென மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் காவல்துறையினர் மாணவரின் செல்போன் சிக்கனலை வைத்து பார்த்த போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருப்பதாக சிக்கனல் காட்டியது. இதனால் கடத்தல் கும்பல் மாணவனை காரிலேயே வைத்துகொண்டு எங்கும் நிறுத்தாமல் சுற்றி வருகின்றனர் என்பது தெரியவந்தது.
![kkk](http://image.nakkheeran.in/cdn/farfuture/01NnPgk3ZyG9ER3Ro0Y875cHhc0a-09iKp3EpDFetAg/1535927968/sites/default/files/inline-images/IMG-20180901-WA0056.jpg)
இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அனுப்பி தேடினர். இந்த கடத்தலில் வேலூரை சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்றுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரியவந்து சில ரவுடிகளை பிடித்துவந்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தியது. அதோடு, கடத்தல்காரர்களை சுட்டு பிடிக்கவும் திட்டமிட்டனர். இதனால் பயந்து போன கடத்தல்காரர்கள் இரண்டு நாளில் மாணவனை விடுவித்து விட்டு தப்பி சென்றனர். அந்த மாணவனிடம் போலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தியும் சரியான தகவலை அவன் கூறவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 1ந்தேதி அதிகாலை ரமேஷ் குடியிருக்கும் வீட்டின் மீது மர்ம கும்பல் ஒன்று, பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றுள்ளது. இதில் வீட்டின் வெளியே நிறுத்திவைத்திருந்த 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த ஏசி மற்றும் பல பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளன. மனிதர்கள் யாருக்கும் தீங்கு ஏற்படாமல் தப்பிவிட்டனர்.
இது குறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளின் கைவரிசை தொடர்வதால் மாணவனின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ரவுடி ஜானியின் கூட்டாளிகள் கைவரிசை உள்ளது என்கிறது போலிஸ்சின் ஒருதரப்பு. அதுப்பற்றி தீவிரமாக விசாரணை நடத்தியும் வருகின்றனர்.