Skip to main content

பொங்கல் போட்டிகளில் மரக்கன்றுகள்தான் பரிசு!! புயல் பாதிப்பிலிருந்து மீள இளைஞர்களின் முயற்சி!!

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் தை திருநாளை முன்னிட்டு கிராமங்களில் கலை, இலக்கியம், விளையாட்டு என்று பல்வேறு போட்டிகளை நடத்தி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புயலின் தாக்கத்தால் பல கிராமங்களிலும் பொங்கல் நிகழ்ச்சிகளை இளைஞர்கள் ரத்து செய்துள்ளனர். ஆனாலும் பல இடங்களில் விழாக்கள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. கீரமங்கலம், செரியலூர், வேம்பங்குடி மற்றும் பல ஊர்களிலும் கோலப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

 

Young people who gave trees to the pongal festivals from the impact of the storm!

இந்த நிலையில் கஜா புயலால் கீரமங்கலம் உள்ளிட்ட அனைத்துக் கிராமங்களும் மரங்கள் ஒடிந்து பலத்த சேதமடைந்திருந்த நிலையில் விரைவில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்தந்த கிராம இளைஞர்கள் செயல்பட தொடங்கி உள்ளனர். அதனால் கடந்த வாரம் அணவயல் கிராமத்தில் இழந்த மரங்களை மீட்டோம் என்று ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி உள்ளனர். 

 

அதே போல வடகாட்டில் அஜித் ரசிகர்கள் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். அதே போல நெடுவாசல் கிராமத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ முத்துக்குமரன் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகளை வழங்கியதுடன் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். மேலும் வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டை காண வந்த பொதுமக்களுக்கு மாமரத்து நண்பர்கள் குழுவினர் 5 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்கள். அதே போல குளமங்கலம் வடக்கு திரு.வி.க மன்றத்தின் சார்பில் பொங்கல் விழாக்கள் நடத்திய இளைஞர்கள் பரிசு பொருளுடன் தலா ஒரு மரக்கன்று வழங்கியதுடன் விழாவைக் காண வந்த பொதுமக்களுக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

 

Young people who gave trees to the pongal festivals from the impact of the storm!

 

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது.. மரங்கள் அதிகமாக உள்ள பகுதியாக ஆலங்குடி தாலுகாவின் கிழக்குப் பகுதியான கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, குளமங்கலம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்தது. ஆனால் புயலால் அத்தனை மரங்களும் ஒடிந்து நாசமானதால் மரங்களை வளர்த்த விவசாயிகள் மனமுடைந்துள்ளனர். அதனால் விரைவில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒவ்வொரு கிராம இளைஞர்களும் களமிறங்கி உள்ளோம். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இனிமேல் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்குவதுடன் அந்த கன்றுகளை மக்கள் பராமரிக்கவும் செய்து வருகிறோம். அதே போல பொது இடங்களில் இளைஞர்களே மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்