பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்கு கடைக்கோடியில் உள்ளது அல்லிநகரம். இந்த ஊர் அரியலூர் ரயில்வே நிலையம் அருகில் உள்ளது. அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி வயது 22. இவர் அதே பகுதியில் உள்ள கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதோடு, அவ்வப்போது பாட்டிக்கு துணையாக அவரது வீட்டில் சில நாட்கள் தனலட்சுமி தங்குவது வழக்கம். அப்படி பாட்டி வீட்டில் தங்கி இருந்தபோது அந்த வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் அருள்பாண்டியன் என்பவர், தனலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தனலட்சுமியை முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்கு விரும்பிய அருள்பாண்டியன், தனலட்சுமியின் பெற்றோரிடமும், தனலட்சுமியின் பாட்டியிடமும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் கேட்டுள்ளார். அருள் பாண்டியனுக்கு பெற்றோர்கள் இல்லாத காரணத்தால் அவருக்கு தனலட்சுமியை பெண் தர மறுத்துள்ளனர். இதனால் தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அருள் பாண்டியன் கடும் கோபத்துடன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் குளப்பாடி கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில். பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அதனால், தனது உறவினருடன் இருசக்கர மொபட் வாகனத்தில் தனலட்சுமி வந்துள்ளார். அவரை வழிமறித்த அருள் பாண்டியன், காட்டில் எலி, முயல், அணில் போன்றவைகளை குத்தி வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுளுக்கி என்ற கூர்மையான ஆயுதத்தால் தனலட்சுமியை குத்தியுள்ளார். அது அவரது வயிற்றில் இருந்து முதுகு பக்கம் வெளியே வந்துள்ளது. ரத்தவெள்ளத்தில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அங்கிருந்து தப்பியோடிய அருள்பாண்டியன், தனது கோழி பண்ணையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குன்னம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.