இளம்பெண் கொடுத்த அந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன், "ஏன் இதை தீவிரமாக விசாரிக்கவில்லை' என்று காவல்துறையை எச்சரித்தார். பின்னர், அந்த புகைப்படங்களை எடுத்த வங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமாரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும், 24 மணி நேரத்திற்குள் எட்வின் ஜெயக்குமாரை கைதுசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
புகைப்பட ஆதாரங்கள் மூலம் ஜெயக்குமாரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து, அவரை கைதுசெய்யக் காரணமான அந்த இளம்பெண் ஜெயக்குமாரின் மனைவி என்று தெரியவந்தது. அவரிடம் இது குறித்து நாம் விசாரித்தபோது, நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். கடந்த டிசம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்துச்சு. கணவர் எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார்.
கல்யாணம் ஆன அடுத்த சிலநாளில், ரீட்டா என்பவரை தனது தூரத்து உறவுக்காரப் பெண் என்று அழைத்து வந்து, "இவர் இனி இந்த வீட்டில்தான் தங்குவார்' என்றும் கணவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு.
அதுமட்டுமல்லாம, வீட்டுக்கு லேட்டாக நடுராத்தியில வருவார். அதுக்குப்பிறகும் செல்போனில் தொடர்ச்சியா பேசிக்கிட்டேயிருப்பார். ஒருநாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்தபோது, அவருடைய நிர்வாணப் படங்களையும் பெண்களுடன் அவர் நிர்வாணமா இருக்கும் படங்களையும் பார்த்தேன்.
அவர் வேலைக்குப் போனபிறகு, வீட்டிலிருந்த பீரோவில் பார்த்தபோது 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துச்சு. அதில், வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக அவர் படமெடுத்து இருப்பதையும், அந்த ஏரியா பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதையும் பார்த்து நொந்துபோயிட்டேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்துள்ளதையும் பார்த்தேன். சில பெண்களுக்கு அசிங்கமாக குறுஞ்செய்திகளும் வீடியோக்களும் அனுப்பியிருந்தார்.
அதில், தேவிபிலோமினாள் என்ற பெண்ணுக்கு போன் போட்டு, "ஏன் இப்படி என் புருஷனிடம் பேசுற, இது அசிங்கம் இல்லையா?'ன்னு கேட்டேன். அதுக்கு அவ சிரிச்சுகிட்டு, "நான் மட்டும் இல்ல... உன் புருஷனோட நிறைய பெண்களுக்கு தொடர்பு இருக்கு. அவரு எங்களை விட்டுப் பிரிந்து போகமாட்டாரு. நீ இன்னைக்குத் தான் வந்திருக்க. நான் பலமுறை நீ இருக்குற வீட்டுக்கு வந்திருக்கேன். இதை பெரிசுபடுத்தாம இருந்தா உனக்கு நல்லது'ன்னு சொன்னபோது எனக்கு தலையே சுற்றியது.
புவனா என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தில் அவர் கர்ப்பமடைந்த விபரமும், அதை கலைக்க சொல்லி என் கணவர் கட்டாயப்படுத்திய வாட்ஸ்அப் தகவல்களும் இருந்துச்சு.
வங்கியில் பணம் செலுத்த வரும் பெண்களை குறிவைத்து அவர்களை வசியப்படுத்துவதற்காகத் தான் காசாளர் பணியிலிருந்து உயர் பதவிக்கு மாறாமல் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஞானரோசி, விமலா, லட்சுமி, தமிழ்ச்செல்வி, மரியா, சிட்டு, அகிலா என பல பெண்கள் என் கணவருடன் தொடர்பில் இருக்குறாங்க.
என் வீட்டுக்கு அருகே இருக்கும் பெண்களையும் ஆபாசமா படம் எடுத்து வச்சிருக்கிறார்.
இந்த வீடியோ, போட்டோக்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் இப்படித்தான் இருப்பேன். அவுங்க என்னுடைய தோழிகள். நான் என் இஷ்டத்துக்குதான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னா உன்னை கொலை செய்துடுவேன். உனக்குத் தெரியாமல் உன்னையே நான் படம் எடுத்து வச்சிருக்கிறேன். நீ குளிக்கும்போது உனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வச்சிருக்கிறேன். என்னைப் பற்றி ஏதாவது பேசினா அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்' என மிரட்டிக்கிட்டே இருந்தார்.
ஒரு பக்கம் இப்படி கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணைக் கொடுமை இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரால் நரக வேதனையை அனுபவித்தேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில, யாருமில்லாத மலைப்பகுதிக்கு என்னை அழைச்சிக்கிட்டு போனார். உயிருக்கு ஆபத்துன்னு மனசுக்குப் பட்டதால அங்கிருந்து தப்பிச்சு என் அம்மா வீட்டிற்கு வந்துட்டேன்.
அம்மா, அப்பாவுடன் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர் மீது 498, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்குப் பயந்துதான் முன்ஜாமீன் கேட்டார். அதுக்கு எதிராக நான் மனு போட்டு, அவரை உள்ளே தள்ளினேன்' என்றார் ஆத்திரமும் அழுகையுமாக.
இதுகுறித்து வங்கி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, "அவர் மேல நிறைய புகார் இருக்கு. விராலிமலை காவல் நிலையத்தில் செமத்தியா வாங்கியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் சரிக்கட்டி வெளியே வந்துவிட்டார்'' என்கிறார்கள்.
-ஜெ.தாவீதுராஜ்.