தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்தப் பேரவை கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறும் என அலுவல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் நாள் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வில் அரசு கொடுத்திருந்த உரையில் சில வார்த்தைகள் ஆளுநரால் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாடு முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியதும் சர்ச்சையானது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவ அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரியின் முன்பு தமிழ்நாடு வரைபடத்தைக் கையில் ஏந்தியவாறு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "தமிழ்நாட்டின் பெருமைகளை ஏற்க மறுக்கும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என முழக்கமிட்டனர்.
இதில் மாணவர்கள் அமைப்பு தலைவர் மதுசூதனன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஆளுநரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதுபோல் பழனி ஆண்டவர் கலைக் கல்லூரி மாணவர்களும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாநகரில் உள்ள பல பகுதிகளில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், "தமிழ்நாடு வாழ்க, கெட் அவுட் ரவி" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களும் அங்கங்கே ஒட்டப்பட்டு இருந்தது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராகத் தொடர்ந்து அரசியல் கட்சியினரும் மாணவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.