ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என ஓபிஎஸ், அமமுகவின் டி.டி.வி தினகரன் கைகோர்த்து இன்று தேனியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதே நேரம் அதிமுகவின் எடப்பாடி அணியினர் 'பொன்விழா எழுச்சி மாநாடு' என்ற பெயரிலான மாநாட்டிற்கான தீவிர பணிகளில் இறங்கியுள்ளனர்.
இதற்காக முன்னாள் அமைச்சர்கள் ஒன்று கூடி ஆலோசனைகள் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், ''பொங்கல் பொங்கிக் கொண்டே வந்தது. புதுக்கோட்டையிலேயே பொங்கல் பொங்கி வழிந்தது. திருச்சியில் வந்து பார்த்தால் மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கு, அதற்குள் பொங்கல் இன்று வடிந்து நிற்கிறது. இந்த பொங்கல் யாருக்கு. யாரோ ஒருவர் 'கொசு தொல்லை தாங்க முடியல' என்பதைப் போல போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
நம்பிக்கை இழந்து, நிராயுதபாணியாக, தொண்டர்கள் செல்வாக்கை இழந்து, மக்கள் செல்வாக்கை இழந்து, அரசியல் விலாசத்தை இழந்து, உயர் நீதிமன்றத்தில் தோற்று, உச்சநீதிமன்றத்தில் தோற்று, தேர்தல் ஆணையத்தில் தோற்றுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி எங்களுக்கு கைகொடுக்கும் என்று சொன்னார். அங்கே அவர்களுக்கு செருப்படிதான் கிடைத்தது. ஆனால் எடப்பாடி அவர்களுக்கு வாசல் வரை வந்து வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பை பார்த்ததற்கு பிறகும் முட்டாள்களை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது. பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் இந்த எழுச்சி மாநாடு பதில் சொல்லும் வகையில் அமைய வேண்டும். பத்து தினங்களாக 10 மாவட்டங்களில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் பிறகு கன்னியாகுமரியில் கூட்டம் நடைபெற இருக்கிறது. மாநாடு என்றாலே ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்கும் பணியை நாங்கள் செய்து வருகிறோம்'' என்றார்.