நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தம் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் நடத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பங்குபெறக்கூடாது. அப்படி பங்கு பெற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று பொதுமக்கள் பேருந்து வசதி இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் நாளை 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொமுச நிர்வாகி நடராஜன், ''பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை 60 சதவீதம் பேருந்துகள் இயக்க ஒத்துழைப்பு வழங்கப்படும். நாளை முன்னணி நிர்வாகிகள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். மற்ற தொழிலாளர்கள் பணிக்குச் செல்வார்கள்'' என்றார்.