Skip to main content

"ரபியாவை ஜனாதிபதி நேரில் அழைத்து பதக்கத்தை வழங்க வேண்டும்" - மு.தமிமுன் அன்சாரி

Published on 23/12/2019 | Edited on 23/12/2019


புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 27- வது பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபியா வெளியேற்றப்பட்டது குறித்து மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

Thameem Ansari statement

 



அதில், "புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் , மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி ராபியாவுக்கு அடையாள வெறுப்பை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் பெற, முன்கூட்டியே அரங்கிற்கு வந்து அமர்ந்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு சில நிமிடங்கள் முன்பு, அவரை அதிகாரிகள் அரங்கிலிருந்து வெளியேற்றியது ஏன்? என்ற கேள்வியை அவரும் எழுப்பியுள்ளார். இப்போது எல்லோரும் எழுப்புகிறார்கள். இதற்கு அவரது பெயர் ஒரு காரணமா? அவர் அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா? அல்லது இன , மத வெறுப்பு காரணமா? என்ற கேள்விகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் நேர்மையாக விளக்கமளிக்க வேண்டும்.

 



இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பட்டத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, தங்கப் பதக்கத்தை திருப்பியளித்த ராபியாவின் சுயமரியாதையையும்,துணிச்சலையும்  பாராட்டுகிறோம். சுதந்திரம், துணிச்சல், சமூக நீதி, ஆகியவற்றுடன் அவர் கல்வி அறிவை வளர்த்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். மற்றவர்களுக்கும் இது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும்.

அதன் பிறகு, அவர் தன் பிரச்சனையோடு மட்டுமின்றி, நாட்டின் இன்றைய தீவிரப் பிரச்சனைகள் குறித்தும்  ஊடகங்களிடம் கவலை தெரிவித்திருப்பது, அவரின் சமூக பொறுப்பையும், அக்கரையையும் வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இது போன்ற பிரச்சனை , இனி யாருக்கும் வரக்கூடாது என்ற அளவில் ஒரு விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி மாணவி ராபியாவை, நேரில் அழைத்து அந்த தங்கப் பதக்கத்தை வழங்கி இப்பிரச்சனைக்கு தீர்வு வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இதில் புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தலையிட்டு, இதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து , பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆப்பிரிக்கா வானத்தின் நட்சத்திரம் விழுந்தது... யூசுப் அல் கர்ளாவி மரணம்” - தமிமுன் அன்சாரி 

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Yusuf Al Garlawi tamimun ansari

 

ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை. 

 

காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். 

 

நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம்  எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.

 

மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது. 

 

பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும்  பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. 

 

தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது  பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். 

 

ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

"பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்"-  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

tamilnadu bjp and rss leaders homes incident pmk ramadoss statement

 

பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (25/09/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை உட்பட தமிழ்நாட்டில் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள்  கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

 

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது கடந்த 22- ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த குண்டு வெடிக்காததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனால், பொதுமக்களும், காவல்துறையினரும் நிம்மதியடைந்த நிலையில், கோவை மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தான் மக்களின் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

 

கோவையில் தொடங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவியிருக்கின்றன. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் சென்னை சிட்லபாக்கம், சேலம், கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த செய்திகள் வருவதை அலட்சியப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதல்களில் மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கூட பொது சொத்துகளும், தனிநபர் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுத்து என்ன நிகழுமோ? என்பது குறித்த அச்சம் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களின் மக்களிடம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

 

தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று தமிழகம் அமைதிப்பூங்கா என்பது தான். இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்ததை தங்களின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டு வருவதை நாம் அறிவோம். அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் 20- க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; அவற்றின் சி.சி.டி.வி காட்சிகளும் பெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் ஓரிருவரைத் தவிர, பெட்ரோல் குண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டுமே நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடாது; கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 

தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.