Skip to main content

“பயங்கரவாதம் எந்த மூலையில் இருந்து வந்தாலும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்”- ஜமாத் கூட்டமைப்பு

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

“We will never tolerate  from any quarter”- Jamaat Federation

 

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6 நபர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலாளர், டிஜிபி போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.

 

இந்நிலையில் கோவையில் ஜமாத் கூட்டமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை  நிலவி வருவதால் ஜமாத் மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் தீவிரவாதம் எந்த வழியில் வந்தாலும் எந்த ஜமாத்தாரும் துணை போக மாட்டோம். நடந்த சம்பவத்திற்கு ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

இந்த சம்பவத்தில் இறந்த முபின் என்ற நபராகட்டும், அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களாகட்டும் கோவையில் எந்த ஜமாத்திலும் எந்த இயக்கத்திலும் அங்கம் வகிக்காத நபர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ மூளை சலவை செய்யப்பட்டு செயல்படுவதாக நாங்கள் அறிகிறோம்.

 

என்.ஐ.ஏ. வளையத்தில் விசாரணையில் இருக்கக் கூடிய நபர்கள்  திடீரென ஒரு பயங்கரவாதச் செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிக அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. உளவுத்துறையும் என்.ஐ.ஏ.வும் இதைத் தவற விட்டு விட்டார்களோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 

 

கோவை அமைதிப் பூங்காவாக அனைத்து மத மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பயங்கரவாதம் எந்த மூலையில் இருந்து வந்தாலும் அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையும் தமிழக அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஜமாத்தார் உறுதுணையாக இருப்போம்” எனக் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்