![‘We believe one hundred percent that the DMK government will do ..’ Postgraduate teachers](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Hw9E02xxpeYeixVQ1-bxQM-6YJ8J5u7XCurCalMCwE/1627365834/sites/default/files/inline-images/th-1_1430.jpg)
2021ஆம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் ஓர் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்மூலம், தான் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் அங்கு உள்ள மக்களிடத்தில் அவர்களின் பிரச்சனைகளை மனுக்களாக பெற்று, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் அதற்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சி அமைத்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்காக தனியாக ஒரு துறை அமைத்து, அதற்கு ஐ.ஏ.எஸ். ஷில்பா பிரபா சதீஷை தலைவராக நியமித்து அதற்கான பணிகளையும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். அதன்படி தற்போது அந்தத் துறை செயல்பட்டுவருகிறது. பல்வேறு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுவருகிறது. அதேசமயம் நீண்டகாலம் எடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இப்படி 2021ஆம் அண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈரோட்டில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் நிகழ்ச்சியில், 2019 - 2020 கல்வியாண்டிற்கான தேர்வு முடித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருக்கும் 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என சாருலதா என்பவர் மனு கொடுத்திருந்தார். தற்போது, அந்த மனுவை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடித்தத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தாங்கள் கொடுத்த மனுவின், ‘கோரிக்கைக்கான பதிவு எண்: 429990’ என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடித்தத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு 12.06.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி செப்டமர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்ற எங்களை 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
அதன்பின், தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலை 20.11.2019 அன்று சில பாடங்களுக்கும், 02.01.2020 அன்று சில பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறையால் பணியாணை வழங்கப்பட்டது. அதன்படி 2018 - 2019 கல்வியாண்டிற்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், 2019 - 2020இல் ஏற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இன்னும் எங்களை வைத்து நிரப்பப்படாமல் உள்ளன.
கடந்த 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து பலமுறை சென்று கடந்த ஆட்சியிலிருந்த முன்னாள் முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய இடங்களில் நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் 2019 - 2020 ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கான இரண்டாவது பட்டியலை வெளியிடும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும், பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினர். ஆனால், தேர்தல் காரணமாக பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறையில் 1,500க்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரி காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான பணிநாடுநர்களை உடனடியாக எடுத்துத் தரும்படி அசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது.
29.01.202 அன்று சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை சந்தித்து, எங்களுக்குப் பணி வாய்ப்பினை வழங்கிடும்படி அணுகியபோது, ‘உங்களுக்கான பணியை வழங்கும் அதிகாரம் அரசிடம் மட்டுமே உள்ளது. அதற்கான விதிகளை உருவாக்கி பணிகளை வழங்கிடலாம்’ என்று தெரிவித்தனர்.
11.02.2021 அன்று 2020 - 2021 ஆண்டிற்கான 2,098 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதி, சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டவர்களில் 40, 45 வயதைக் கடந்தவர்கள் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளனர். ஆகையால் இந்த அறிவிப்பு எங்களின் ஆசிரியர் கனவை நீர்த்துப் போகச் செய்துள்ளது. ஆகையால், 2019 - 2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், 1,500க்கும் மேற்பட்ட எங்களை வைத்து விரைவில் பட்டியல் வெளியிட வேண்டும். அதன்பிறகு மற்றவர்களுக்குத் தேர்வு நடத்திட வேண்டும்.
22ஆம் தேதி ஈரோட்டில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின்போது சாருலதா, எங்கள் 1,500 நபர்களின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாக பேசி கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாகச் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார்.
07.05.2021 அன்று திமுக ஆட்சியில் அமர்ந்தது. தமிழகத்திற்கும், சான்றிதழ் சாரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகிய எங்களுக்கும் வாழ்வில் விடியல் பிறக்கப்போகிறது என்று நூறு விழுக்காடு நம்பிக்கை பிறந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.