கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் 36 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வழிப்பறி, திருட்டு, வன்முறை, கொலை உள்ளிட்ட குற்றசம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் உதவியுடன் மங்கலம்பேட்டை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றமில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், விபத்து மற்றும் குற்ற செயலில் ஈடுபடுவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் தமிழக அரசின் உறுதுணயோடு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனின் உத்தரவின் பேரில் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமரா பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மங்கலம்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளின் தீவிர முயற்சியால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 27 கிராமங்களில் 81 சிசிடிவி கேமாரக்கள் பல லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் 28-வது சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், பொதுமக்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
மீதமுள்ள 8 கிராமங்களிலும் விரைவில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் என்றும், கடைசியாக அமைக்கபடவுள்ள நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளரை அழைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட விழா நடத்த போவதாகவும் காவல் அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவித்தனர். மேலும் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவால் குற்ற சம்பங்கள் குறைந்து உள்ளது என்றும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.