முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று (26.12.2024) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சர்தார்புரா தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான அசோக் கெலாட் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து அறிந்ததும் கவலையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெற வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மன்மோகன் சிங் மீண்டும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் எம்பி பிரியங்கா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். அதோடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மருத்துவமணைக்கு விரைந்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜேபி நட்டா வருகை வந்துள்ளார். மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.