சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று (25.12.2024) இரவு போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் இன்று (26.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலத்தை எப்படிக் கொடுக்கிறார்களோ அப்படிப் பதிவு செய்யப்படுவது தான் எஃப்.ஐ.ஆர். ஆகும். அதன்படி தான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ. ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகு விசாரணையைத் தொடர்ந்தோம். கோட்டூர்புரம் காவல் துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பொறுப்புகளை ஒப்படைத்து விசாரிக்கிறோம். சந்தேகப்பட்ட நபர்கள் சிலரை விசாரித்தோம். ஆதாரப்பூர்வமாக டவர் லொகேஷன் போன்றவற்றைக் கண்டுபிடித்து அடுத்த நாள் காலையில் 25ஆம் தேதி குற்றவாளியைப் பிடித்து விட்டோம். அதன் பின்பும் குற்றத்தைச் செய்ததை உறுதிப்படுத்துவதற்காக மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அதில் குற்றவாளி என்பது உறுதிப்படுத்திய பின்பு ரிமாண்ட் செய்தோம். இதுதான் இந்த வழக்கில் நடந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மற்ற சில குற்றங்களுக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்போது சி.சி.டி.நெஸ் ஆட்டோமேட்டிக்காகவே இணையத்தில் முடக்கப்பட்டுவிடும். ஐ.பி.சி. சட்டமானது, பி.என்.எஸ்.சட்டமாக மாறும்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப்.ஐ.ஆரை முடக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தாமதமான நேரத்தில் ஒரு சிலர் எஃப்.ஐ.ஆரை பதிவேடு பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் வழியாக இந்த எஃப்.ஐ.ஆர். வெளியாகி இருக்கலாம் எந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நகல் வழங்கப்படும். அது கட்டாயம் ஆகும். இந்த இரண்டு வழிகளில் தான் ஏதாவது ஒரு வழியில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்க வேண்டும்.
இது போன்ற வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். வெளியில் வரக்கூடாது. இது மாதிரி வெளியிடுவது சட்டப்படி குற்றம். அவ்வாறு வெளியான எஃப்.ஐ.ஆரை கொண்டு பெரிய அளவில் விவாதம் செய்வதும் சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை எந்த வகையிலும் தெரிய கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கக்கூடிய தகவல்களை வைத்துப் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்ற அளவில் தகவல் கொடுப்பதும் தவறாகும். அதனால் அது மாதிரி கொடுக்கப்பட்ட தகவல்களை வெளியே தெரியவந்துள்ளதால் எஃப்.ஐ.ஆரை வெளியிட்டது தொடர்பாக கோட்டூர்புரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது யார் என்பது குறித்துக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படும்.
சம்பவம் நடந்தபோது குற்றவாளி ‘சார்’ என்று ஒருவருடன் பேசியதாகச் சொல்லப்படுவது தவறான தகவல். அந்த சம்பவம் நடைபெற்ற போது அவர் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்துள்ளது. கடந்த 2013 முதல் ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் சென்னை காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது பெண்களை வன்கொடுமை செய்தது போன்ற வழக்குகள் இல்லை. இதுவரை ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக வேறு எந்த பெண்களும் புகார் தரவில்லை. ஞானசேகரன் வேற எதுவும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சி.சி.டி.வி. கேமராக்க்கள் உள்ளன. அதில் 56 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இதனை ஆதராமாக கொண்டு தான் குற்றவாளியை கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.