சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று (25.12.2024) போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே மாணவியின் புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றிய கட்டுமான தொழிலாளர்கள், காவலர் என பலரிடம் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது மேலும், சட்டவிரோதமாகச் சிறை வைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஞானசேகரனுக்கு எதிராக மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவத்தைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரியப் பாதுகாப்பும், மருத்துவ வசதியும் செய்து தரத் தமிழக டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த கொடூரமான செயலை ஆணையம் கடுமையாகக் கண்டிக்கிறது. அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் தேசிய மகளிர் ஆணையம் துணை நிற்கிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதைத் தேசிய மகளிர் ஆணையம் எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாடு காவல்துறை முந்தைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. இந்த அலட்சியம் அவரை இதுபோன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டியது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது தீவிர கவலையை எழுப்புகிறது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜய ரஹத்கர் தமிழக டிஜிபிக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும். கடுமையான தண்டனைக்கு பி.என்.எஸ், 2023இன் பிரிவு 71ஐ முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவும். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியதற்காகவும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பி.என்.எஸ் பிரிவு 72ஐ மீறியதற்காகவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.