டிச.20 காலை சுமார் 9.30க்கும் மேல், நெல்லையின் பாளையை ஒட்டியுள்ள கீழ் நத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் மாயாண்டி, தன் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகளிலிருந்த போதும், பாளை தாலுகா காவல்நிலையத்தில் பதிவான சிறு வழக்கு ஒன்றின் நிலுவை காரணமாக அன்று நெல்லை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வந்திருக்கிறார். அவர் நீதிமன்றம் வரும் முன்பாக அவரது கூட்டாளிகள் கோர்ட் வளாகத்தில் அவருக்காகக் காத்திருந்திருக்கிறார்கள்.
சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த மாயாண்டியும் அவரது கூட்டாளி ஒருவரும் சேர்ந்து நீதி மன்றம் எதிரேயுள்ள டீ கடை ஒன்றில் 10 மணியளவில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளனர். டீ குடித்த பின்பு இருவரும் நீதிமன்றம் செல்ல எதிரேயுள்ள சாலையைக் கடக்கும் சமயம் அங்கு காரில் தயாராகக் காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள்களுடன் மாயாண்டியை வெட்டுவதற்கு விரட்டியபோது, அது கண்டு பயந்துபோன மாயாண்டியும் அவரது கூட்டாளியும், ஓட்டமெடுத்துத் தப்பிக்க, கொலைக் கும்பல் அவர்களை விரட்டியிருக்கிறது. மாயாண்டியை மட்டும் விரட்டிய கும்பல் நீதிமன்ற நுழைவு வாசலில் மாயாண்டியின் காலை இடறிவிட்டதில் அவர் கீழே சரிய, சுற்றி வளைத்த கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமை நீதிமன்றம் பரபரப்பாயிருந்த நேரத்தில் நடந்த இந்தக் கோரக் கொலைச் சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் மெயின் சாலையில் சென்ற மக்களின் கூட்டம் பீதியில் சிதறி ஓடியது. நீதிமன்றம் வளாகத்திலிருந்த வழக்கறிஞர்கள் அலறியிருக்கிறார்கள்.
நீதிமன்ற வளாகப் போலீஸ் பாதுகாப்பையும் மீறிய நடந்த சம்பவத்தின் போது பாதுகாப்பிலிருந்த சிறப்பு எஸ்.ஐ.யான ஊய்க்காட்டான் என்பவர் மட்டும் கொலையாளியைப் பிடிப்பதற்காகப் பின்தொடர்ந்து ஓடியிருக்கிறார். தப்பிய கொலையாளிகளில் மூன்று பேர், எதிரேயுள்ள உணவகம் பக்கம் தயாராக நின்றிருந்த கேரள பதிவெண் கொண்ட காரில் ஏறி தப்பினர். ஆனால் ஒருவர் மட்டும் காரில் ஏறுவதற்குள் சிறப்பு எஸ்.ஐ. விரட்டி வருவது கண்டு எதிரே உள்ள தெருவிற்குள் தப்பி ஓட தொடர்ந்து அவரை எஸ்.ஐ. விரட்டியபோது, எதிரே வந்த வக்கீல்களான கார்த்திக் தம்பான், இருதயராஜ் இருவரும் அந்தக் கொலையாளியை வழிமறித்து வளைத்து பிடித்திருக்கிறார்கள். அவரைத் தன்வசம் கொண்ட வந்த எஸ்.எஸ்.ஐ, பின்னர் அவரை விசாரித்த போது கீழ நத்தம் வடக்கூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரிய வந்திருக்கிறது. மேல் விசாரணைக்காக அவர் பாளை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.
கொலையான மாயாண்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பிவைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த நெல்லை போலீஸ் கமிசனர் ரூபேஷ்குமார் மீனா, துணை கமிஷனர்களான விஜயகுமார், மற்றும் கீதா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இதனிடையே கொலையை நடத்திவிட்டு காரில் தப்பிய மூன்று நபர்களும், காருடன் பாளை தாலுகா காவல்நிலையத்தில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் கீழநத்தம் மனோராஜ், தங்கமகேஷ், சிவமுருகன் என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பாளை போலீசார் 5 பேரைக் கைது செய்திருக்கிறார்கள்.
ஏன் இந்தப் பட்டப்பகல் வெறித்தனமான கொலை? கிடைத்த தகவல்கள் பதறவைக்கின்றன.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. பிரமுகரான கீழ நத்தம் வடக்கூரைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் வார்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஊராட்சியில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது எதிர் தரப்பினருக்கு ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கிறதாம். அதையடுத்து பெட்டிக்கடை நடத்திவந்து ராஜாமணி 2023ன் போது அதே பகுதியில் வெள்ளிமலை நிலைய பாலமருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கீழநத்தம் மேலூரைச் சேர்ந்த 2 பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக கீழநத்தம் மேலூரைச் சேர்ந்த மாயாண்டி மற்றும் தெற்கூரைச் சேர்ந்த இசக்கிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இந்தக் கொலையில் மாயாண்டியும் இசக்கிமுத்துவும் குண்டாஸில் சிறையிலடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொலையுண்ட ராஜாமணியின் தம்பியும் இன்ஜினியரிங் படித்தவருமான மனோராஜ், தன் அண்ணன் வெட்டப்பட்டு பலியானது கண்டு மனமுடைந்தவர் அன்று முதல் வேதனையிலும் துக்கத்திலும் இருந்திருக்கிறார். மேலும் தன் அண்ணன் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்துடனே இருந்திருக்கிறாராம். காரணமான மாயாண்டியை கொல்லும் வாய்ப்பை எதிர் நோக்கியிருந்திருக்கிறாராம்.
இதனிடையே குண்டாஸில் உள்ளே போன மாயாண்டி கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தவர் வேறு ஒரு வழக்கு காரணமாக மீண்டும் சிறை வைக்கப்பட்டார். இவரை எதிர்பார்த்துக்காத்திருந்த மனோராஜ் கூட்டாளிகளுக்கு அதுசமயம் வாய்ப்பு அமையவில்லையாம். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வெளியே வந்த மாயாண்டியின் கதையை முடிக்க மனோராஜ், கூட்டாளிகளுடன் வேவு பார்த்த போது சரியான சந்தர்ப்பம் அமையாமல் போகவே கடைசியாக வழக்கு ஒன்றில் டிச 20 அன்று ஆஜராக மாயாண்டி பாளை நீதிமன்றம் வருவதை உறுதி செய்த மனோராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் நீதிமன்ற நுழைவு வாயிலை டார்கெட் செய்து கூட்டாளிகளுடன் சேர்ந்து மாயாண்டியை நீதிமன்ற வாசலிலேயே கொலை செய்து பகை தீர்த்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
கொலைசெய்யப்பட்ட மாயாண்டி கொலை வழக்கு உட்பட பல்வேறு சிறு வழக்குகளில் தொடர்புடையவர். கொலை வழக்கு தொடர்பான நபர்களைக் கண்காணித்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்வது வழக்கம். இதனால் பல குற்றச் சம்பவங்களைப் போலீசார் தடுத்துள்ளனர். ஆனால் மாயாண்டி சிறு பிரச்சினை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தது போலீசார் கவனத்திற்கு வரவில்லை. அதனால் இச்சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க தனிப்பட்ட பகையாகும். மேலும் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார் சம்பவ இடத்தில் இருந்த போலீஸ் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா.
பழிக்குப் பழி பகைக்கணக்கு தீர்ப்பது நீடிப்பது நெல்லை மாவட்டத்தைப் பீதியில் உறைய வைத்திருக்கிறது.