முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (வயது 92) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அதன் பின்னர், ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் தகவல் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 92 வயதில் மறைந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று அவர் இன்று திடீரென சுயநினைவை இழந்தார். அதனைத் தொடர்ந்து இரவு 8:06 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டார். எவ்வளவோ முயற்சிகள் செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இரவு 09:51 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மன்மோகன் சிங்கும் நானும், அவர் பிரதமராக இருந்தபோதும், நான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோதும் தொடர்ந்து உரையாடினோம். ஆளுகை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய அறிவும் பணிவும் எப்போதும் எனக்குத் தெரியும். துக்கமான இந்த நேரத்தில், எனது நினைவுகள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களுடன் உள்ளன.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காகத் துக்கம் அனுசரிக்கிறது. ஏழ்மையான தோற்றத்தில் இருந்து உயர்ந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார். பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையைப் பதித்தார். நாடாளுமன்றத்தில் அவர் செய்த செயல்கள் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.