Skip to main content

‘கடந்த வருடம் காணாமல் போன பைக்; சிறப்பு எஸ்.ஐ. மகனிடம் இருந்து மீட்பு’ - வெளியான பகீர் தகவல்!

Published on 24/12/2024 | Edited on 24/12/2024
The bike that went missing last year Special SI Rescue from the son information released 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் மகன் போத்தி.  இவர் டரைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவில் தனது தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்த போது தனது மற்றும் பைக் டேங்க் கவரில் வைத்திருந்த செல்போன் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இது குறித்து கடந்த ஜனவரி 1ஆம் தேதி போத்தி கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கீரமங்கலம் போலீசாரும் காணாமல் போன டிரைவர் போத்தியின் பைக்கை தேடிவருகின்றனர்.

இந்நிலையில் பைக் காணாமல் போல சில நாட்களில் அறந்தாங்கியில் ஒரு நபர் அந்த பைக்கை ஓட்டிச் செல்வதைப் பார்த்துள்ளார். அப்போது அந்த பைக்கை பிடிக்க முயன்ற போது பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டனர். காணாமல் போன பைக் அறந்தாங்கி பகுதியில் தான் சுற்றுகிறது என்பதை உறுதி செய்த போத்தி தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (23.12.2024) போத்தி அறந்தாங்கி சென்ற போது ஒரு வருடம் முன்பு காணாமல் போன தனது பைக்கில் ஒரு இளைஞர் செல்வதைப் பார்த்து அந்த பைக் பின்னாலையே போத்தியும் சென்றுள்ளார். பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் ஒரு மாடி வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு மாடிக்கு ஏறிச் சென்றுவிட்டார்.

தனது பைக் தான் இது என்பதை உறுதி செய்த போத்தி அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் சொல்லி கீரமங்கலத்தில் காணாமல் போன பைக் அறந்தாங்கியில் ஒரு வீட்டு வாசலில் நிற்கிறது அதனை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த பைக்கை மீட்டு போத்தியிடம் பைக்குக்கான ஆவணங்கள், புகார் மனு நகல் ஆகியவற்றை சரி பார்த்த பிறகு பைக்கை போத்தியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பு கீரமங்கலத்தில் காணாமல் போன பைக் நின்ற வீடு அறந்தாங்கி டி.எஸ்.பி.யின் கீழ் இயங்கும் கிரைம் டீம் எஸ்.எஸ்.ஐ சண்முகம் வீடு என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு எப்படி இந்த பைக் கிரைம் எஸ்.எஸ்.ஐ. சண்முகம் வீட்டிற்கு வந்தது என்று போலீசார் நடத்திய விசாரனையில் கடந்த ஒரு வருடம் முன்பு அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நின்றது. யாரும் தேடி வரவில்லை அதனால் என் மகனிடம் கொடுத்திருந்தேன் என்று கிரைம் டீம் எஸ்.எஸ்.ஐ. சண்முகம் சாதாரனமாக கூறியுள்ளனர். சில போலீசார் நம்மிடம்.., ‘எந்த ஊரில் இது போல பைக்குகள் பிடிபட்டாலும் உடனே வாகன எண்ணை வைத்து ஆன்லைன் மூலம் வாகன உரிமையாளர் முகவரியை கண்டுபிடித்து அந்த முகவரி உள்ள பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த பதிவு எண் கொண்ட வாகனம் காணவில்லை என புகார் உள்ளதா என்பதை ஆய்வு செய்து புகார் இருந்தால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைப்பது தான் வழக்கம். அதே போல வாகன உரிமையாளர் முகவரி இருப்பதால் அவருக்கும் தகவல் கொடுப்பது நடைமுறை. ஆனால் எஸ்.எஸ்.ஐ சண்முகம் சொல்வது போல கடந்த ஜனவரி மாதம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நின்ற வாகனமாக இருந்தாலும் உடனே காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் தன் வீட்டிற்கு கொண்டு போய் மகனை பயன்படுத்தச் சொன்னது தவறு” என்றனர்.

மேலும், “யாரோ பைக் திருடனிடம் இருந்து கிரைம் டீம் கைப்பற்றிய பைக்களில் தஞ்சாவூர் மாவட்ட பதிவு எண் இருந்ததால் அதனை இங்கே தேடி வரமாட்டார்கள் என்று அந்த பைக்கை தனியாக எடுத்து ஒரு வருடமாக பயன்படுத்தி வந்துள்ளார் என்பதே உண்மை. ஆனால் பைக் ஓனர் புதுக்கோட்டை மாவட்டம் என்பதும் அறந்தாங்கி பகுதியில் தேடி வருகிறார்கள் என்பதும் அவருக்கு தெரியாமல் இருந்ததால் பதிவு எண்ணைக் கூட மாற்றாமல் தன் மகனிடம் கொடுத்துள்ளார். இது போல வேறு என்னவெல்லாம் செய்திருக்கிறாரோ அதனை மாவட்ட எஸ் பி தான் விசாரிக்க வேண்டும்” என்றனர். திருட்டு பைக்கை கடந்த ஒருவருடமாக கிரைம் டீம் எஸ்.எஸ்.ஐ தனது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்ததும் தற்போது அந்த பைக்கை உண்மையான ஓனர் கண்டுபிடித்து வாங்கிச் சென்றுவிட்டதும், இதனை எந்த பதிவும் இல்லாமல் மறைத்ததும் காவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த சில மணி நேரத்தில் அறந்தாங்கி டிஎஸ்பி கிரைம் டீம் எஸ்.எஸ்.ஐ சண்முகத்தை உடனே அந்த பொறுப்பில் இருந்து நீக்கி அவர் பணியாற்ற வேண்டிய ஏம்பல் காவல் நிலையப் பணிக்கே அனுப்பியுள்ளனர்.

அதன்படி எஸ்.எஸ்.ஐ சண்முகம் செவ்வாய் கிழமை மதியம் ஏம்பல் காவல் நிலையப் பணிக்கு திரும்பியுள்ளார். திருடர்களிடம் கைப்பற்றும் பொருட்களை இப்படி ஒரு சில போலீசாரே வைத்துக் கொள்வதால் பொதுமக்களிடம் எப்படி நல்ல பெயர் கிடைக்கும். இவரை மேலும் விசாரித்து இது போல வேறு என்னவெல்லாம் கைப்பற்றியுள்ளார் என்பதையும் கண்டறிய வேண்டும். துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சக போலீசாரும் சமூக ஆர்வலர்களும். 

சார்ந்த செய்திகள்