முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (வயது 92) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், அதன் பின்னர், ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் தகவல் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதே சமயம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மன்மோகன் சிங், இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் எனது வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் பிரதம மன்மோகன் சிங்கின் மறைவால், தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு அரசியல்வாதியையும், குற்றமற்ற ஒருமைப்பாட்டின் தலைவரையும், இணையற்ற அந்தஸ்துள்ள பொருளாதார வல்லுநரையும் இந்தியா இழந்துவிட்டது. பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் உரிமைகள் சார்ந்த நலன் சார்ந்த முன்னுதாரணம் ஆகிய கொள்கைகள் கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை ஆழமாக மாற்றியது. இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி கோடிக்கணக்கானோரை வறுமையிலிருந்து மீட்டது.
அவரது அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக, ரயில்வே துறை அமைச்சராக, சமூக நலத்துறை அமைச்சராக இருந்ததில் பெருமிதம் கொள்கிறேன். வார்த்தைகளைக் காட்டிலும் செயல் திறன் கொண்டவர். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பு இந்திய வரலாற்றில் என்றென்றும் நினைவு கூறப்படும். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாபெரும் இழப்பை சமாளிக்கும் உறுதியை அவர்களுக்கு கிடைக்கட்டும். இந்தியாவின் வளர்ச்சி, நலன் உள்ளடக்கிய கொள்கைகளில் அவரது நீடித்த எண்ணம் என்றென்றும் போற்றப்படும். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான பிரியாங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அவரது நேர்மை எப்போதும் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும். மேலும் இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் மத்தியில் அவர் என்றென்றும் தலைநிமிர்ந்து நிற்பார். அவர் தனது எதிரிகளால் நியாயமற்ற மற்றும் ஆழமான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளான போதிலும் தேசத்திற்கு சேவை செய்வதில் உறுதியுடன் இருந்தார். அவர் இறுதி வரை உண்மையான சமத்துவவாதி, புத்திசாலி, வலிமையான மற்றும் தைரியமானவர் ஆவார். அரசியலின் கரடுமுரடான உலகில் தனித்துவமான கண்ணியமான மற்றும் மென்மையான மனிதர் ஆவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.