தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம் பஞ்சாயத்துராஜ் தினம் கடைப்பிடிக்கப்படுவதை ஒட்டி 'நீடித்த வளர்ச்சி இலக்குகள்' குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் பஞ்சாயத்துராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து கிராம சபை கூட்டங்கள் நடத்த ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
வழக்கமாக ஆகஸ்ட் 15-சுதந்திர தினம், அக்டோபர் 2-காந்தி ஜெயந்தி, ஜனவரி 26-குடியரசு தினம், மே 1-உழைப்பாளர் தினம் ஆகிய நான்கு தினங்கள் என ஆண்டுக்கு நான்கு தினங்கள் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், கரோனா காரணமாக கிராமசபை கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய 12,200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற இருக்கிறது என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.