![Madras High Court](http://image.nakkheeran.in/cdn/farfuture/UJN-l-CxYoDK5pGwWNMsjTY1DyOPwnaz5_PegCXccnA/1593541503/sites/default/files/inline-images/657_8.jpg)
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் நளினி 30 நிமிடம் வீடியோ கால் மூலம் பேசியதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததால், நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும், சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக, நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனால், முருகன் ஜூன் 1-ஆம் தேதி முதல் சிறையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், நளினியும் முருகனும் சந்தித்துப் பேச அனுமதி வழங்கக் கோரியும், நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நளினி மற்றும் முருகன் வீடியோ கால் மூலமாக 30 நிமிடம் பேசியதாகவும், அதைத்தொடர்ந்து, முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும், நீதிமன்றத்தில் சிறைத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.