
கவிப்பேரரசு வைரமுத்துவின் ’தமிழாற்றுப்படை’ வெளியீட்டு விழா 12-ந் தேதி மாலை சென்னை காமராசர் அரங்கில் சிறப்புற நிகழ்ந்தது. அரங்கு கொள்ளாத கூட்டம். அரங்கு முழுக்க பிரபல முகங்களே தென்பட்டன. திரைமறைவில் இருந்தபடி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த தொகுப்பாளர்களின் கணீர்க் குரலும் உச்சரிப்பும் நிகழ்ச்சியின் கூடுதல் பலம்.

நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற நீதியரசர் விமலா, தமிழுக்குப் பெருமை சேர்க்கிறவர் என்று கவிப்பேரரசுக்கு புகழாரம் சூட்டினார். கம்பீரமாக உணர்ச்சிகரமாக முக்கால் மணி நேரம் உரை நிகழ்த்தினார் மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ. தமிழாற்றுபடையில் விவரிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி சரஞ்சரமாக வார்த்தைகளை அடுக்கி, அவையோரை ஆர்ப்பரிக்க வைத்தார். வைரமுத்துவே, தமிழாற்றுபடையை எழுதியது நானா? இல்லை வைகோவா? என்று வியக்கும் அளவிற்கு நூலின் பகுதிகளை அப்படியே நினைவில் இருந்து சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

கவிஞரின் மகன் கபிலன், தமிழாற்றுப்படையை இணையத்தில் எப்படியெல்லாம் உலகத் தமிழ் மக்கள் ருசிக்கலாம் என்பது குறித்து விளக்கினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிதானமாக கவிஞரின் வரிகள் பலவற்றைத் தொட்டுக் காட்டியதோடு, இந்தியைத் தவிர தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் இப்போது நெருக்கடியில் இருப்பதையும், அவை அனைத்தும் இணைந்து போராட வேண்டிய அவசரத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இருபது நிமிட அளவுக்குப் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கலைஞரின் தமிழுக்கும் தானே வாரிசு என்பதை அழுத்தமாக நிரூபித்தார். கலைஞரோடு கவிஞருக்கு இருந்த நெருக்கம் குறித்து உருக்கமாக விவரித்த அவர், சரியான நேரத்தில் நமக்கான போர்க் கருவியாக தமிழாற்றுப்படையை கவிஞர் வைரமுத்து தந்திருப்பதாகப் பாராட்டினார்.

தன் ஏற்புரையில், தமிழின் பெருமிதத்தை உணர்த்தவும் மேன்மையை விளக்கவும் தமிழாற்றுப்படையைப் படைத்ததாகக் குறிப்பிட்ட வைரமுத்து, மூவாயிரம் ஆண்டுக்குப் பின்னாலிருந்து தொடங்கி தமிழாற்றுப்படையைத் தான் படைத்ததைப் போல், மூவாயிரம் ஆண்டு முன்னோக்கிச் சென்று ஒரு படைப்பை படைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இன்றைய அவரது செம்மாந்த உணர்ச்சிகரமான உரை, உலகத்தின் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாகச் சுடர்விட்டது. சென்னையை இலக்கிய பெருமழையில் ஒரேயடியாய் நனைத்தது தமிழாற்றுப்படை விழா.
-சூர்யா
படங்கள்: அசோக்குமார்