திருச்சி திருவெறும்பூரில் இளம்பெண் உஷா மரணடைய காரணமாக இருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவெறும்பூர் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ், தம்பதிகள் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச்சென்று எட்டி உதைத்தார். இதில், கணவருடன் வண்டியின் பின்பக்கம் அமர்ந்திருந்த உஷா என்ற பெண் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், சுமார் 3000 பேர் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பிலிருந்து வந்த கண்டனங்கள் குவிந்ததால், உஷா மரணத்திற்கு காரணமாக இருந்த காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அதனை நீதிமன்றம் 3 முறையும் தள்ளுபடி செய்துவிட்டது.
பின்னர் காமராஜ் மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், காமராஜுக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.