எஸ்.வி. சேகர், எச்.ராஜா போன்றவர்கள் தமிழக அரசும், காவல் துறையும் தங்களை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோரிக்கை வைத்து இருப்பது நியாயமானது. இது வரவேற்றத்தக்கது. கவர்னர் தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கினார். துணை வேந்தர் நியமனத்தில் கூட தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டார்.
கவர்னருக்கு அதிகாரம் உள்ளதா? தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற சர்ச்சை கிளம்பும் அளவிற்கு கவர்னரின் செயல்பாடு இருந்தது. கவர்னர் தொடர்ந்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் அதிகரிக்கும். எனவே கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியானதே.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பயணத்தின் போது கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. இந்த காட்டு மிராண்டித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சமூகத்தில் பதட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திராவிட கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
வைகோ பிரசார பயணத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதாவின் இது போன்ற திசை திருப்பும் முயற்சிக்கு யாரும் பலியாகி விடக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை திசை திருப்ப இது போன்ற செயல்களும், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களால் மோசமான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.
எஸ்.வி. சேகர், எச்.ராஜா போன்றவர்கள் தமிழக அரசும், காவல் துறையும் தங்களை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இருவரையும் தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் இவர்கள் தமிழக அரசுக்கு தலைவலியாகவும், நெருக்கடியாகவும் மாறுவார்கள். இவ்வாறு கூறினார்.