சத்தீஸ்கர் மாநிலம், மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். நன்றாக படித்து வந்த இவர், பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில் அங்குள்ள ஒரு தனியார் மையத்தில் கணினி வகுப்பில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி கணினி வகுப்பை முடித்து வீட்டுக்கு திரும்பிய இந்த சிறுமியிடம், பள்ளி ஆசிரியர் ஒருவர் தான் வந்து வீட்டில் விடுவதாகக் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய சிறுமி, ஆசிரியருடன் சென்றுள்ளார். ஆனால், அவர் சிறுமியை வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டில் பள்ளி முதல்வர், பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றும் வனப்பாதுகாவலர் ஆகிய மூன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, அந்த சிறுமியை நான்கு பேரும் வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை வீடியோவாக எடுத்து, இதுபற்றி யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதில் பயந்து போன சிறுமி, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 22ஆம் தேதி மளிகை பொருட்கள் வாங்க வெளியே வந்த சிறுமியை, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீண்டும் மிரட்டி அதே வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து இரண்டாவது முறையாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் மனமுடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், பழங்குடியின சிறுமியை இரண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் ரவேந்திர குஷ்வாஹா, பள்ளி ஆசிரியர்கள் குஷால் சிங் பரிஹர், அசோக் குஷ்வாஹா, மற்றும் வனப் பாதுகாவலர் பன்வாரி சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழங்குடியின சிறுமியை இரண்டு முறை பள்ளி ஆசிரியர்களே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.