டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பிஜ்வாசன் பகுதியில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் உயர் தீவிர விசாரணை பிரிவு (HIU) இந்தியா முழுவதும் செயல்படும் மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்குடன் தொடர்புடையதாகக் கருதப்படுபவர்களைக் குறிவைத்து இன்று (28.11.2024) அதிரடி சோதனையைத் தொடங்கியது. தனிநபரின் தகவல்களைத் திரட்டி மோசடியில் ஈடுபடுதல், க்யூ. ஆர். குறியீடு மோசடி மற்றும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக மோசடி உட்பட ஆயிரக்கணக்கான இனையவழி குற்றங்களின் மூலம் திரட்டப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடந்தன.
அதன்படி அமலாக்கத்துறையில் இயக்குநரக குழு சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது 5 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து இந்த சம்பவம் நடைபெற்ற வளாகம் போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும் இது குறித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குநர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.