


திருவண்ணாமலை மாவட்டம் ,தண்டராம்பட்டு வட்டம், மேல் முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரபு வார விழா கொண்டாடப்பட்டது. இதில் பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் சிறு தானியங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது.
மாணவர்களின் தாங்கள் விளைவித்த உணவு தானியங்களைக் கொண்டு கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், தினைமாவு மற்றும் கீரை வகைகளை கொண்டு தயார் செய்த பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
மேலும் பாரம்பரிய சிறுதானிய வகைகளான கேழ்வரகு சாமை,குதிரைவாலி,தினை, கம்பு, மக்காச்சோளம், மூங்கில் அரிசி, கருப்புக் கவுனி அரிசி, சிவப்பு அரிசி, சீரகச்சம்பா அரிசி வகைகள் மற்றும் துவரை, கடலை,அவரை, உளுந்து போன்ற 50க்கும் மேற்பட்ட பலவகையான பாரம்பரிய தானியங்களும், கண்காட்சியில் இடம்பெற்றது. கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.
கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கு.கொளந்தை தலைமை தாங்கினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தொன்மை பாதுகாப்புமன்ற ஒருங்கிணைப்பாளர் சமூக அறிவியல் ஆசிரியருமான இரா.ரேவதி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தொன்மை பாதுகாப்புமன்ற உறுப்பினர் மாணவர்களும் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.