தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வந்தது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் அதன்பின்னர் நகராமல் ஒரே இடத்தில் நீடித்தது. இதனால் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் (30.11.2024) இந்த புயல் கரையைக் கடக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இதனையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதே சமயம் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (28.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் மிகவும் மெதுவாக நகரத் தொடங்கி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம். நாகப்பட்டினத்திற்கு 310 கி.மீ. தென்கிழக்கிலும், திரிகோணமலைக்கு 110 கி.மீ. கிழக்கு - வடகிழக்கிலும், புதுச்சேரிக்கு 410 கி.மீ. தென் கிழக்கிலும், சென்னையில் இருந்து 480 கி.மீ தெற்கு - தென் கிழக்கு தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.