புவனகிரி, கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் வரையிலான சாலை, போக்குவரத்திற்கு தகுந்த நிலையில் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், நடைபெற்று வந்த சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தடைப்பட்டது. இதனால் சாலை குண்டும், குழியுமாகி மேலும் மோசமானது. போக்குவரத்திற்கு தகுந்த நிலையில் இல்லாததால் விருத்தாசலம், புவனகிரி வழியாக சிதம்பரம் வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி குறிஞ்சிபாடி மற்றும் சேத்தியதோப்பு மார்க்கமாகச் சென்றது.
இந்நிலையில், சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, மீண்டும் விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி வரை சாலையமைக்க, தனியார் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இருவழிச்சாலையை 10 மீட்டர் அகலத்திற்கு அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல, விருத்தாசலத்தில் இருந்து புவனகிரி பங்களா வரை 35 கி.மீ சாலை பணிகளுக்கு விரிவாக்கம் செய்ய, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைத்துறை ரூ.130 கோடி நிதியை ஒதுக்கியது. அதன்படி தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலையோரங்களில் பி.முட்லூர் உள்ளிட்ட சில கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, இழப்பீடு வழங்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணக்கு எடுக்கப்பட்டது. அப்போது, அதிகாரிகள் சரியான முறையில் கணக்கு எடுக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டதால் வீட்டு உரிமையளார்களுக்கு தற்போது இழப்பீடு வழங்குவதில் பாகுபாடு உள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், வீடுகளைக் காலி செய்ய மறுத்து வருவதால், மீண்டும் சாலைப் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, விவசாயி தங்கதுரை கூறுகையில், “எனது வீடு சாலை விரிவாக்கப் பணியில் இடிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. வீட்டைக் கம்பி காலம் அமைத்து இரும்புக் கம்பியுடன் கான்கிரிட் போட்டு கட்டியுள்ளேன், போர்டிகோ உள்ளது. இதனை அதிகாரிகள் கணக்கு எடுக்கும்போது சரியாக ஆய்வு செய்யாமல் வெறும் செங்கல்லால் கட்டப்பட்ட வீடு என்றும் போர்டிகோ, படிகள் இல்லை என்றும் பதிவு செய்துவிட்டனர். இதனால் எனக்கு பக்கத்து வீட்டைவிட ஒரு சதுர அடிக்கு ரூ.1,000 குறைவாக இழப்பீடு வந்துள்ளது. இதனால் நான் பல லட்சத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இவர்கள் கொடுக்கும் இழப்பீட்டை வைத்துக்கொண்டு புதிய வீடு கட்டமுடியால் அவதிப்படுகிறேன். எனக்கு உரிய இழப்பீடு கிடைக்கும்வரை எந்த எல்லைக்கும் போகத் தயார்.” இந்தச் சம்பவத்தால் குடும்பத்துடன் பெருத்த மன உலைச்சலுடன் இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இதேபோன்று பலகுடும்பங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும் என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து விருத்தாச்சலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழிலிடம் கேட்டபோது, "மேல்முறையீடு கொடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.