சேலத்தில், அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளான கொட்டையன் மற்றும் மொட்டையன் ஆகிய இருவரையும் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தை அடுத்த நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர், உத்தமசோழபுரம் அருகே, கடந்த ஏப்ரல் 24ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர், சுபாஷை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எஸ்.நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கொட்டையன் என்கிற சதீஸ் என்கிற பிரபாகரன் (30) என்பவர்தான் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவம் நடந்த அன்றே அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2019ம் ஆண்டு தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை தாக்கி கொலை செய்த முயற்சித்த வழக்கும், 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிங்காரம் என்பவரை கத்தியால் வெட்டிய வழக்கும் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதேபோல், சின்ன கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி, நெய்க்காரப்பட்டி அருகே நடந்து சென்றபோது, அவரை கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த மணி மகன் மொட்டையன் என்கிற பிரபு (32) கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின்பேரில் சம்பவம் நடந்த அன்றே மொட்டையனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், அவர் மீதும் ஏற்கனவே அடிதடி, வழிப்பறி வழக்குகள் காவல்துறையில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் கொட்டையன், மொட்டையன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை (மே 19) குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களிடம், குண்டர் சட்ட கைது ஆணையை காவல்துறையினர் சார்வு செய்தனர்.