தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி தமது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகளை கண்டு பிடிக்க தஞ்சை எஸ்பி மகேஷ்வரன், அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த கொலை விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தஞ்சையின் பல இடங்களில் கடையடைப்பு மற்றும் மவுன போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மன்னார்க்குடியில் பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட 50 பேரை, தடையை மீறி கும்பகோணத்தில் பாஜக ஊர்வலத்தில் பங்கேற்க முயன்றதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .