சேலம் குமாரசாமிப்பட்டி அருகே தனியார் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற பெண்கள் மட்டுமின்றி போக்சோ, பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகளையும் காவல்துறையினர் இந்த மையத்தில் சேர்க்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்படுகின்றனர். இந்த மையத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 17) நள்ளிரவு, காப்பகத்தில் இருந்து 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் தப்பி ஓடிவிட்டனர். வழியில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி, தங்களுடைய தந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.
சிறுமிகள் பதற்றத்துடன் கூறியதால் அதை நம்பிய ஆட்டோ ஓட்டுநரும் அவர்களை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார். அதில், சிறுமிகள் மூன்று பேரும் காப்பகத்தில் இருந்து தப்பியோடி வந்திருப்பதும், ஆட்டோ ஓட்டுநரிடம் பொய் சொல்லி வந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சிறுமிகள் மூவரையும் மீட்ட காவல்துறையினர், அவர்களை மீண்டும் அதே பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.