ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்றுவது திமுக மட்டும்தான் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 27, 2019) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானத்தில் சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் அவருக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம் குரங்குசாவடி அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கு பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களை ஸ்டாலின் வரவேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், ''திமுகவில் தங்களை இணைத்துக்கொண்ட உங்களை இன்முகத்தோடும், மகிழ்ச்சியோடும் புளகாங்கிதத்தோடும் வருக வருக என வரவேற்கிறேன். எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக, ஆட்சியில் இருந்து என்னென்ன காரியங்களை செய்ய முடியுமோ, அந்தக் காரியங்களை எல்லாம் செய்ய வாய்ப்பில்லை என்று சொன்னாலும், அதை எல்லாம் ஆட்சியில் இருப்போர் நிறைவேற்றிட வேண்டும் என்று உறுதியோடு எடுத்துச் சொல்லக்கூடிய, பல்வேறு போராட்டங்கள் வாயிலாக வாதாடக்கூடிய வகையில் தொடர்ந்து திமுக பணியாற்றி வருகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகதான் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தால்தான் இன்றைக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தாய்க்கழகத்தில் இணைந்திருக்கிறீர்கள். எந்த நம்பிக்கையில் நீங்கள் எல்லோரும் திமுகவில் இணைந்தீர்களோ, அதே நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள். எதையும் எதிர்பாராமல் சிறப்பாக பணியாற்றுவோருக்கு, உரிய பொறுப்புகள் தேடி வரும்,'' என்றார் ஸ்டாலின்.
இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்திருந்தபோது, அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் திமுகவினர் 193 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதலை ஆனார்கள். அவர்கள் அனைவரும் இன்று காலை ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு திமுக தலைவர் சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக அவர், சேலம் மத்திய மாவட்ட செயலாளரின் தாயார் அழகம்மாளின் உருவப்படத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல், கலைஞரின் நண்பரும் எழுத்தாளருமான இரா.வெங்கடசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் அமானின் மனைவி ரஹமத்துன்னிசா ஆகியோரின் உருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாலை தி.க. பவள விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்பாக, தாரமங்கலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கலைஞரின் முழு உருவச்சிலையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.