தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இன்று இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிபிஇ (PPE) கிட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் துணை ராணுவப்படையினர், மாநில காவல்துறையினர் உட்பட 1.58 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தேர்தல் வாக்களிக்க விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சிகிச்சை பெறும் 8,991 கரோனா நோயாளிகளில் 17 பேர் மட்டுமே வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத் தொகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 94 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என சுகாதாரத்துறையிடம் கூறியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா நோயாளிகள் வாக்களிக்க விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா நோயாளிகள் வாக்களிக்கும் முன் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்பு உடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.