திருவாரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்களை தேர்தல் காரணம் காட்டி வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் செய்ததை கண்டித்து ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி தோ்தல் விதிமுறை காரணமாக வட்டாட்சியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் அசோக் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் அனைத்து அலுவலர்களும் தேர்தல் குறித்த ஆயத்தப்பணிகளை முற்றிலுமாக புறக்கணித்து அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை சேர்ந்த 900 பேரும் வருவாய்த்துறையினர் 324 பேர் என 1200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பணிமாறுதல் உத்தரவை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.