Skip to main content

பெரியார், அம்பேத்கரின் ஜனநாயக கோட்பாடுகள் வெற்றி பெற வேண்டும் : திருமாவளவன் பேச்சு

Published on 31/12/2018 | Edited on 31/12/2018

நெல்லையில் நடைபெற்ற பெரியாரின் 140வது பிறந்தநாள் தேசிய கருத்தரங்க விழாவில் மக்கள் கலைநிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன. பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த இந்தக் கருத்தரங்க விழாவில் நடிகர் சத்யராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சி.பி.எம்மின் வாசுகி, மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

 

pp

 

 

இக்கருத்தரங்கில் நடிகர் சத்யராஜ் பேசும்போது,

உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர் நான். நான் பெரியார் படத்தில் நடித்தபோது அதன் விழாவில் தலைவர் கலைஞர் பெரியாரின் மோதிரத்தை எனக்குப் பரிசாக விரலில் போட்டார். அதுதான் மிகப் பெரிய சம்பளம். அப்ப தலைவர் கலைஞர் சொன்னார். அய்யா மோதிரத்தை அடைய பல பேர் முயற்சி பண்ணுனாங்க. நான் கூட ஆசைப்பட்டேன். ஆனா அந்த மோதிரம் தம்பி சத்யராஜூக்கு கிடைச்சிருக்கு. அதுதான் பொருத்தம்ன்னு சொன்னார். என்னால பெரியாரா நடிக்க முடியுமான்னு எனக்கு சந்தேகம். மேக்கப் டெஸ்ட்லாம் நடந்தது. ஆனா தலைவர் கலைஞர் மட்டும்தான், நீ, தந்தை பெரியாரா நடிக்கப் பொறந்தவம்பான்னார். அய்யா பெரியார் கிண்டலும் கேலியுமா பேசுவார். அதுல ரொம்ப சிறப்பு இருக்கும். ஒரு பச்சைத் தமிழன்தான் முதலமைச்சரா வரணும் அதுக்கு காமராஜர் தாம்யா முதல்வரா வரணும்னு சொன்னார் அய்யா. என்று பல விஷயங்களைப் பேசி மேடையை கலகலப்பாக்கினார்.

 

pp

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, 

 

சிறுபான்மையான நாம் கடவுள் மறுப்பு கொள்கைகளை பற்றி பேசி வருகிறோம். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது கடவுள் பற்றி கருத்துக்கள் திணிக்கப்பட்டு உள்ளது. அனைத்து சாதிகளிகளிடமும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவு இருக்கிறது. இந்த தீண்டாமை தடுப்பு சுவர் பல ஆண்டுகாலமாக இருக்கிறது. இந்த  சனாதன  கோட்பாட்டை தொடக்கத்தில் இருந்தே உருவாக்கி விட்டார்கள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை. அதனால் தான் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பெரியார், அம்பேத்கரின் ஜனநாயக கோட்பாடுகள் வெற்றி பெற வேண்டும். இந்த கோட்பாடுகள் வெற்றி பெற்றால் சாதி, மத பேதம் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.

 

சி.பி.எம்மின் வாசுகி பேசும் போது,

திருச்சி தமிழகத்தின் இதயம் போன்ற நகரம். அங்கே நேஷனல் கல்லூரி, ஜோசப் கல்லூரி போன்ற மதம் சார்ந்த கல்லூரிகள்தான் இருந்தன. ஆனால் ஏழை எளிய மாணவர் மாணவிகளுக்கு என அரசு கல்லூரி கிடையாது. அவர்களுக்காக கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்று பெரியார், அரசிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். அப்போதைய முதல்வர் பக்தவத்சலம், ஐந்தரை லட்சம் கொடுத்தால் கல்லூரி ஆரம்பிக்கலாம் என்றார். அதை தந்தை பெரியார் கொடுத்தார். அரசு கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் பெரியாரை மேடை ஏற்றவில்லை. அதை பெரியார் பொருட்படுத்தவில்லை. கல்லூரியில் சாதாரண மாணவர்களைச் சேர்க்கவில்லை. அப்போது பெரியார் என்ன சொன்னார் தெரியுமா. அவர்கள் அப்படித்தான். என்னிடம் நிர்வாகத்தைக் கொடுத்தால், நான் மாணவர்களின் மார்க் பட்டியலைப் போடுவேன். முடித்ததும் கடைசியில் 40 மார்க் வாங்கிய மாணவன் தொடங்கி அட்மிஷன் போடுவேன் என்று சொன்னவர் தந்தை பெரியார். ஏழை எளிய மாணவ-மாணவிகளும் படிக்க வேண்டும் என்று சொன்னவர். என்றார் நெகிழ்வாக.

 

pp

 

 

தொடர்ந்து கனிமொழி பேசும் போது,

 

1929-ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில்தான் தந்தை பெரியார் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார். அதைத் தலைவர் சட்டமாக்கியப் போதுதான் நான் பெரியாரைப் பற்றி நினைத்துக் கொண்டேன். எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் தலைமைக்கு வருகிறார்கள். அதை ஏற்றுக் கொள்பவர்கள்தான் பதவியில் வைக்கப்படுகிறார்கள். ஆக நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா அமைப்பைச் சார்ந்தவர்களே. ஆதிக்க மனப்பான்மை விதைக்கப்பட்டுவிட்டது. எந்தக் கேள்வி கேட்டாலும் பெரியாரால் பதில் சொல்ல முடியும். ஆனால் இந்துத்துவா அமைப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது.

 

திருச்சி மாநாட்டில் ஜெயகாந்தன் இளைஞன், தன் கருத்துக்களைப் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்த தோழர்களுக்கும், கூட்டத்தினருக்கும் அவர், பெரியாரை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால் தந்தை பெரியார் அந்த இளைஞனின் பேச்சைத் தன் கைத் தடியால் தட்டித் தட்டி ரசித்தார். நாம் மேடையில் எத்தனை பேரை விமர்சித்தோம். அதைப் போன்று நம்மை விமர்சிப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்ன பெரியார் ஜெயகாந்தனை அருகில் அழைத்துப் பாராட்டினார்.

 

பெண்கள் நாட்டின் தெய்வம் என்று பேசுகிறார்கள் அந்தப் பெண் தெய்வங்களை கோவிலுக்குள் அனுமதிக்க  நீங்கள் மறுக்குறீர்கள். விமானத்தில்கூட முன்பே புஸ்பக விமானம் இருந்தது என்பார்கள். இதைக் கேள்வி கேட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எதிரி என்பார்கள். ஆனால் பெரியார் கேள்வி கேட்கணும்னு சொல்வாங்க. அதுதான் உரிமை.

 

பல பேர் பெண்ணியம் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அதற்கு ஒரு அளவுகோல் இருக்கும். ஆனால் தந்தை பெரியார் மட்டும் அனைத்தையும் சொன்னவர். சின்னச்சின்ன தொழில்கள் நசுக்கப்படுகின்றன. பெரிய பெரிய கார்ப்ரேட்டுகள்தான் அவர்களுக்கு முக்கியம். தேர்தலின் போது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றார்கள். எத்தனை பேருக்கு நீங்கள் வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள் என்ற யதார்த்த நிலையும் வெளிப்படுத்தினார் கனிமொழி.

 

பெரியாரின் சிந்தனைகள் ,கருத்துகள் யதார்த்த நடைமுறைகள் என்றைக்கும், எக்காலத்திற்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே, குறிப்பாக இன்றைய இளைய தலைமுறைக்கு என்பதையே வெளிப்படுத்தியது இந்தக் கருத்தரங்கம்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்