தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உள்பட, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நீதிமன்றங்கள்!
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸினால், இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கடந்த 23- ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இதனால், அத்தியாவசியப் பணிகளைத் தவிர நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இழுத்து மூடப்பட்டுள்ளன.
அவசியம் என்று கருதப்படும் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்றங்கள் எதுவும் செயல்படாததால், நீதிமன்றங்களில் பெறப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் பெரும் பாதிப்பு!
உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட செசன்சு நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகியவை பல வழக்குகளை விசாரித்து இடைக்காலத்தடை உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கும். அந்த இடைக்காலத்தடை உத்தரவுகள் எல்லாம் மார்ச் 20- ஆம் தேதி, அல்லது அதன் பின்னர் காலாவதியாகக்கூடும். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இதனால், நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் செயல்படவில்லை. வழக்கறிஞர்களுக்கும், வழக்காடிகளுக்கும் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களால் நீதிமன்றங்களில் ஆஜராக முடியாது. நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே, வீடுகளைக் காலி செய்வது உள்ளிட்டவைகளுக்காக ஏற்கனவே பெறப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுகளை எல்லாம் நீட்டிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றங்களிடம் பெறப்பட்ட இதுபோன்ற இடைக்கால நிவாரண உத்தரவுகளின் பலன்களைப் பொதுமக்கள் அனுபவிப்பதற்கு இடையூறு எதுவும் ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம்.
நீட்டிப்பும், நிறுத்திவைப்பும்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால், நீதிபரிபாலன நடைமுறையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாத வண்ணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 226, 227 ஆகியவற்றுடன் இணைந்த குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவுகள் 482, 483 ஆகியவற்றை பயன்படுத்தி, சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம். உயர்நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தையும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்.
சொத்தில் இருந்து ஒருவரை வெளியேற்றவும், அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை இடிக்கவும் உயர்நீதிமன்றம், மாவட்ட செசன்சு நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்கள், ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவுகள் அனைத்தும் வருகிற ஏப்ரல் 30- ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஜாமீன், முன்ஜாமீன், பரோலுக்கும் இது பொருந்தும்!
அதுபோல, குற்றவியல் வழக்குகளில் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு நிபந்தனைகளுடன் பெறப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன், பரோல் ஆகியவை, மார்ச் 20- ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்திருந்தால், அவற்றை எல்லாம் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்.
இந்த உத்தரவுகள் அனைத்தும், இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்து இருந்தால், அந்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும். இவ்வாறு இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டிப்பதால், அரசுக்கோ, தனி நபருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நிவாரணம் கேட்டு அணுகலாம் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.