நெல்லை மாவட்டத்தின் பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ். அதே மாவட்டத்தின் பழங்கோட்டைப் பகுதியில் மின் துறையில் மின் கணக்கெடுப்பு பணியிலிருப்பவர். இவருக்கும் நாலுவாசன் கோட்டையின் செல்லையாவின் மகளான வடகாசிக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது தற்போது தானேஷ்பிரபாகரன் என்கிற ஒன்றரை வயதுக் குழந்தையுமிருக்கிறது. ராஜ் தன் மனைவி வடகாசியுடன் பழங்கோட்டையில் வசித்து வருகிறார். மின்துறைப் பணி என்பதால் இரவு பகல் ஷிப்ட்கள் தொடர்ந்து வருதால் அடிக்கடி வீடு வருகிற சந்தர்ப்பம் அரிதாகியிருக்கிறது. அதோடு அவருக்கு குடிப்பழக்கமும் உண்டு.
இந்த நிலையில் அருகில் உள்ள கழுகுமலையைச் சேர்ந்த சாமிநாதன் பால் வியாபாரம் செய்து வருகிறவர். பழங்கோட்டைப் பகுதியிலும் பால்விற்பனை செய்பவர். திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கின்றன. பால் வியாபாரி என்பதால் அவருக்கு வடகாசியுடன் பழகும் சந்தர்ப்பம் தினமும் கிடைத்திருக்கிறது. இது நெருக்கமாகி இருவருக்கும் உறவுத் தொடர்புகள் உண்டானது. பல மாதங்கள் இந்த உறவு தொடர, ஒரு சந்தர்ப்பத்தில் இதையறிந்த ராஜ், தன் மனைவியைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் இருவருக்குமான தொடர்புகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில்தான் குழந்தை பிறந்து ஒன்றரை வயதாகியிருக்கிறது. இதனிடையே வடகாசியை பழங்கோட்டைக்கு சந்திக்க வருவதற்கு சிரமமாக இருப்பதால் அவ்வப்போது சந்தித்து சந்தோஷமாக இருப்பதற்கு வசதியாக கழுகுமலையில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தியிருக்கிறார் சாமிநாதன். இந்த வீட்டில் அடிக்கடி சாமிநாதனும், வடகாசியும் ரகசியமாகச் சந்தித்து வந்திருக்கின்றனர்.
இதையறிந்த கணவன் ராஜ், தன் மனைவியைக் கண்டிக்க, அவளோ பிள்ளையைத் தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு, கழுகுமலை வந்திருக்கிறாள். இதையடுத்து பிள்ளையை வாங்கி வரச் சொல்லியிருக்கிற ராஜ். குழந்தையை வாங்கச் சென்ற வடகாசி, கிராமத்திற்குச் செல்லாமல் கடந்த 4ம் தேதி இரவு குழந்தையுடன் கழுகுமலை வீட்டிற்கு வந்திருக்கிறாள். அப்போது குடித்து விட்டு வந்த கள்ளக் காதலன் சாமிநாதன் இரவு வடகாசியுடன் உறவிலிருந்த போது தொட்டிலில் இருந்த குழந்தை அழுதிருக்கிறது. அது இடைஞ்சலாக இருந்ததால் குடி வெறியில் தன் காலால் தொட்டிலை ஒங்கி மிதித்திருக்கிறான். வேகத்தில் தொட்டில் பக்கத்துச் சுவரில் மோதியதில் குழந்தையின் மண்டை உடைந்து ரத்தம் வழிய துடித்து அழுதிருக்கிறது. உடனே அந்த இரவில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள், அங்கு குழந்தையைச் சோதனை செய்தவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார்களாம். இதனிடையே வீடு திரும்பிய கணவன் ராஜ் மனைவியைக் காணாததால் கழுகுமலைக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில் வடகாசி குழந்தையைச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்திருக்கிறாள். குழந்தை இறந்து விட்ட நிலையிலிருந்ததையறிந்த டாக்டர்கள் விசாரித்ததில், மாடிப் படியிலிருந்து விழுந்து விட்டதாகச் சொல்ல சந்தேகப்பட்டவர்கள், கழுகுமலைப் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவமனை வந்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, வடகாசி மற்றும் சாமிநாதனிடம் விசாரிக்க, அவர்கள் முரண்பாடான பதிலைச் சொல்லிருக்கிறார்கள். இதனிடையே கணவன் ராஜ் அங்கு வந்து சேர, விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமியிடம், தங்களின் கள்ளத்தனமான உறவையும், குழந்தையின் மண்டை உடைபட்டதையும் சொல்லியிருக்கிறார்கள்.
விசாரணையில் நடந்தவற்றை ஒப்புக் கொண்டார்கள். சாமிநாதன் மற்றும் வடகாசியின் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறார் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி.
மூளையைச் அடித்து நொறுக்கும் காமத்திற்கு பந்தம், பெற்ற பாசமெல்லாம் கால் தூசுக்குச் சமம் போல.