தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. மாவட்டக் குறைதீர் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் வீட்டில் நடைபெறும் சம்பவங்கள், தனிமை போன்றவை காரணமாக மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதால் பள்ளிக்கு வரவேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் காந்தி ஜெயந்தி நாளான இன்று திருச்சியில் 75வது இந்திய சுதந்திர தின ஓட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கொடுக்கப்பட்ட அதே வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஒரு வகுப்பறையில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். பள்ளிக்கூடங்களை திறந்து வைக்கிறோம். மாணவர்களால் எவ்வளவு நேரம் உட்கார முடியுமோ... அவர்கள் பள்ளிக்கு முதலில் வரட்டும்'' என்றார்.